அண்ணன் வீட்டை சூறையாடிய தம்பிக்கு சிறை தண்டனை
அண்ணன் வீட்டை சூறையாடிய தம்பி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த தனவேல் மகன்கள் அந்தோணிராஜ், செல்வராஜ், அன்புராஜ் (வயது 37). சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக அண்ணன் தம்பிகளிடையே பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் அந்தோணிராஜ், செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து அன்புராஜை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்புராஜ் கடந்த ஆகஸ்டு மாதம் 9 ந் தேதி அந்தோணிராஜ் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்களை உடைத்து சூறையாடிதாக தெரிகிறது. இவைகள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தனவேல் மனைவி சின்னப்பிள்ளை உயர் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து அன்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். அன்புராஜ் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால் அவர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த கோட்டாட்சியர் 1 ஆண்டு நன்னடத்தை விதிகளை மீறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அன்புராஜை மீதமுள்ள 169 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து செந்துறை போலீசார் அன்புராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.