டேங்கர் லாரியுடன் 8 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் டேங்கர் லாரியுடன் 8 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-22 20:19 GMT
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் டேங்கர் லாரியுடன் 8 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கலப்பட டீசல்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது. அது போக தேவையான டீசலை வெளி மார்க்கெட்டில் மீனவர்கள் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
அப்படி வாங்கும் மீனவர்களுக்கு சிலர் குறைந்த விலையில் கலப்பட டீசலை விற்பதாக புகார் வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் தேங்காப்பட்டணம் துறைமுகத்துக்கு டேங்கர் லாரி ஒன்று வந்தது. அதில் இருந்தவர்கள் மீனவர்களிடம் டீசல் வேண்டுமா? என்று கேட்டனர். இதுபற்றிய தகவல் புதுக்கடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது டேங்கர் லாரியுடன் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். டேங்கர் லாரி கோவை பதிவு எண்ணுடன் இருந்தது. அதைத்தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை சூப்பிரண்டு இளங்கோவன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் விரைந்து வந்து டீசலை சோதனை போட்டனர். அப்போது அது கலப்பட டீசல் என்றும் அது கம்பெனிகளில் பயன்படுத்தக்கூடியது என்றும் தெரிய வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் விஜி விசாரணை நடத்திய போது, தூத்தூரில் உள்ள ஒரு கம்பெனிக்கு கொண்டு வந்ததாக கூறினார்கள். அவர்கள் கூறிய பெயரில் கம்பெனி எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. 
டேங்கர் லாரி பறிமுதல்
அதைத்தொடர்ந்து 8 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன், டேங்கர் லாரியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 
இது தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுகணன் (வயது 50) மற்றும் அசோக்குமார் (42), தூத்தூர் பகுதியை சேர்ந்த சேவியர் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்