நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெளியூர் பெண் மனுதாக்கல் செய்ததாக ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெளியூர் பெண் மனுதாக்கல் செய்ததாக கூறி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-22 17:49 GMT
ஆம்பூர்

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  வெளியூர் பெண் மனுதாக்கல் செய்ததாக கூறி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிதிராவிடருக்கு ஒதுக்கீடு

ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்டது நாயக்கனேரி மலை கிராமம். இங்கு மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப் பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மலைவாழ் மக்கள் 2,889 வாக்காளர்கள், பொது பிரிவினர் 551 பேர் என 3,440 வாக்காளர்கள் உள்ளனர். இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்து வந்த நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில் நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், சென்னை ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட அனைவரிடமும் தங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் பகுதியில் ஆதி திராவிடர் தற்போது வரை யாரும் இல்லாத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிஆதி திராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி, இதனை மறுபரிசீலனை செய்யக்கோரியும் மனு வழங்கி உள்ளனர்.

பெண் மனுதாக்கல் 

மேலும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில். கடைசி நாளான நேற்று பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இந்துமதி மனுதாக்கல் செய்தார்.

இவர் நாயக்கனேரி மலை கிராமத்திற்குட்பட்ட காமன் தட்டு பகுதியை சேர்ந்த மலைகிராம (எஸ்.டி) வாலிபரான பாண்டியன் என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்று குடியேறி உள்ளார். இந்த நிலையில் இந்துமதி நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனதட்டு பகுதியில் வசித்து வருவதாக வாக்காளர் அடையாள அட்டையை புதுப்பித்து வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
 
முற்றுகை

மேலும் கூடுதல் ஆவணங்களை வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகு கொடுக்க வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவர்களை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கக்கூடாது என கோஷங்களை எழுப்பி, அவர்கள் தங்கள் ஊருக்கு சம்பந்தமில்லாதவர்கள் எனக் கூறி மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆம்பூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்