நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தை சேர்ந்தவர் மொக்கமாயன் (வயது 55). இவரது மகன்கள் ராஜபிரபு (31), பிரபாகரன் (29). இவர்கள் 3 பேரும் நேற்று ராமராஜபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை கண்ட மொக்கமாயனும், அவரது மகன்களும் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பியோடினர். இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது ராஜபிரபு போலீசாரிடம் சிக்கினார். மொக்கமாயனும், அவரது இளையமகன் பிரபாகரனும் தப்பித்துவிட்டனர். இதைத்தொடர்ந்து ராஜபிரபுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் தனது தந்தை, தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் 1 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜபிரபுவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய அவரது தந்தை, தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.