மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
ஆலங்குளம் அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி வீரமணி (வயது 32). இவர்களது மகள் அட்சயா (8). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி தனது மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து வீரமணி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரிஇல்லாத காரணத்தால் அட்சயா இறந்துவிட்டாள். இதனால் வீரமணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று வீரமணி வீட்டில் வைத்து இருந்த எலி மருந்தை குடித்து மயங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.