ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.
மதுரை
ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.
ரெயில்வே தனியார்மயம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, ரெயில்வே அமைச்சகத்தின் கொள்கை முடிவை எதிர்த்து, ரெயில்வே தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் அவ்வப்போது ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. இந்த நிலையில், மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தின் சார்பில், அனைத்துக்கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மாநகர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொது செயலாளர் சூரியபிரகாசம் முன்னிலை வகித்தார். தி.மு.க. எம்.எல்.ஏ. தளபதி, மதுரை எம்.பி. வெங்கடேசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் விஜயராஜன், எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க செயலாளர் அப்துல் சிக்கந்தர், ம.தி.மு.க. மகபூப்ஜான், அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர்கள் சங்க விஜயராஜன், ராஜூவ்காந்தி, தென்னக ரெயில்வே பணியாளர்கள் நலச்சங்க நவுசாத் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேலை இல்லா திண்டாட்டம்
அப்போது ரெயில்வே பாதைகள், ரெயில்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவன தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. ரெயில்வே துறையில் உற்பத்தி பிரிவுகளான என்ஜின் தொழிற்சாலை, ரெயில் பெட்டிகள் தொழிற்சாலை ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மின்சார ரெயில் என்ஜின் தயாரிப்பதை தனியாருக்கு கொடுத்து விட்டு, அமெரிக்காவின் ஜி.இ. நிறுவனத்திடம் இருந்து மின்சார என்ஜின்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்படுகிறது.
ரெயில்வே துறையில் லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அதனை சரண்டர் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் ரெயில்வே அமைச்சகம் செயல்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சங்கத்தின் கோட்ட செயலாளர் கஜன் நன்றி கூறினார். ரெயில்வே துறையை கண்டித்து, முதல் முறையாக மாநில கட்சிகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.