மோசடி வழக்கில் நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை

மோசடி வழக்கில் நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை

Update: 2021-09-21 17:40 GMT
கோவை

மோசடி வழக்கில் நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நிதி நிறுவனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருப்பதி நகரில் மாஷே என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த ராஜா என்கிற சுமன்குமார் (வயது 47), ஓசூரை சேர்ந்த புகழேந்தி (45) ஆகியோர் கடந்த 2000&ம் ஆண்டில் தொடங்கினர்.

இதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் பாபு, சுகதேவன், ஹேமலதா, பர்வீன்ராஜ் ஆகியோர் ஊழியராக வேலை பார்த்தனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 நாளில் பணம் இரட்டிப்பு தருவதாக அறிவித்தனர். 

இதனை நம்பி 86 பேர் பணம் கட்டினர்.அவர்களிடம் ரூ.4 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 62 பணத்தை பெற்று திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.  

வழக்கு தனியாக பிரிப்பு

இது குறித்து பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் புகழேந்தியை கைது செய்தனர். ஆனால் ராஜா தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். 

எனவே இந்த வழக்கை போலீசார் 2-ஆக பிரித்தனர். அதில் புகழேந்தி மீதான வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 31-ந் தேதி தீர்ப்பு கூறினார். 

அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

10 ஆண்டு சிறை 

மேலும் தலைமறைவாக இருந்த ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு  ராஜாவை கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 கோடியே 76 லட்சம் அபராதம் விதித்ததுடன், அதில் ரூ.2 கோடியே 75 லட்சத்தை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்