திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் வீதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5½ கோடி ஒதுக்கீடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் வீதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5½ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
திருவெண்காடு,
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டிற்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று வருகை தந்தார். இதனை தொடர்ந்து அவர், நான்கு வீதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்திட ஆணையிட்டுள்ளார். அதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முதல்-அமைச்சர் அறிவுரைப்படி செயல்படுத்த உள்ளோம்.
மயிலாடுதுறை மாவட்டம் ஏராளமான கோவில்களை உள்ளடக்கிய ஆன்மிக பகுதியாக விளங்குகிறது. பிரசித்தி பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் நவகிரகங்களின் ஒன்றான புதனின் பரிகார தலமாகவும் விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த கோவிலின் நான்கு வீதிகளில் சாலை வசதி, வடிகால் வசதி, மற்றும் மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகண்ணன். சீர்காழி ஒன்றியக்குழுதலைவர் கமலஜோதி தேவேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முல்லை வேந்தன், சுகந்தி நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமைச்சர் பெரியகருப்பன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.