மத்திய அரசை கண்டித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 13:43 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகை புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி கலந்து கொண்டு பேசினார்.

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயா்வை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்த ராஜா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி பொருளாளர் ஓ.எஸ். இப்ராஹிம், திராவிட கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகூர் புதிய பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அவை தலைவர் நூருல் அமீன் தலைமை தாங்கினார். தி.மு.க. நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் மாநில செயலாளர் நவுஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லமுத்து எழிலரசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேவதி பாலகுரு, குமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீனிவாசன், தி.மு.க. கிளை செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல மருதூர் கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைலாசம், இளைஞர் அணியைச் சேர்ந்த ஆசை தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் துரைராசு தலைமையிலும், வாய்மேடு கடைத்தெருவில் ஊராட்சி செயலாளர் பரமசிவம் தலைமையிலும், ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் முன்னிலையிலும், மருதூர் மாடிக்கடை பஸ் நிறுத்தத்தில் ஊராட்சி செயலாளர் ராமநாதன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுரு பாண்டியன் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

கீழ்வேளூர் கடைத்தெருவில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன், மார்க்சிஸ்ட்

கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அபுபக்கர். நகர செயலாளர் அட்சயலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். குருமனாங்குடி ஊராட்சியில் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையிலும், 105 மானலூர் ஊராட்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய துணை செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்கணங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் மரியசார்லஸ் முன்னிலை வகித்தார்.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேளாங்கண்ணி நகர பொறுப்பாளர் ஜான் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

திருமருகல் ஒன்றியத்தில் தி.மு.க.- கூட்டணி கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .திருமருகலில் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசெங்குட்டுவன் தலைமையிலும்,. பூதங்குடியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் தலைமையிலும், திட்டச்சேரியில் நகர செயலாளர் முகம்மது சுல்தான் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழியன் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தலைஞாயிறு பஸ் நிலையத்தில் ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு தி.மு.க. பொறுப்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யத்தில் நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் 79 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்