சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியதில் 37 வீடுகள் சேதம் கார் உரிமையாளர் கைது

சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியது, 37 வீடுகள் சேதம் அடைந்தது. இது தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-21 13:09 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியதில் 37 வீடுகள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
வாணவெடிகள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் அடுத்துள்ள இடைச்சிவிளை குமரன்விளையை சேர்ந்தவர் தானியேல் மகன் பாலகிருஷ்ணன் (வயது 44). இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே அரசு அனுமதியுடன் வாணவெடிகள் தயாரித்தல் மற்றும் சேமிப்பு குடோன் வைத்து உள்ளார். 
நேற்று அதிகாலையில் பக்கத்து ஊரில் நடைபெற இருந்த ஒருவரின் திருமணத்திற்கு தனது காரில் ஏராளமான வாணவெடிகளை ஏற்றிக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் காரை வீட்டு வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
வெடித்து சிதறிய கார்
சிறிது நேரம் கழித்து காரில் இருந்த வாணவெடிகள் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்தது. இதனால் காரும் வெடித்து சிதறியது. குண்டு வெடித்ததுபோல் சத்தம் கேட்டதால் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தங்களது வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். மேலும், வெடித்து சிதறிய வாணவெடிகள், காரின் பாகங்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகளின் சுவர், ஓடு, கண்ணாடி மற்றும் ஜன்னல்கள் சேதம் அடைந்தன. மொத்தம் 37 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 7 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்&இன்ஸ்பெக்டர் முரளிதரன், சாத்தான்குளம் தாசில்தார் விமலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சேதம் அடைந்த கார் மற்றும் வீடுகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
உரிமையாளர் கைது
இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரின் வெப்பத்தால் வாணவெடிகள் வெடித்து சிதறியதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் வாணவெடிக்கு தீவைத்து சென்றனரா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இதுதொடர்பாக காரின் உரிமையாளர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், 'சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு கோரிக்கை விடுத்து உள்ளனர். வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படும்' என்றார்.
சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியதில் 37 வீடுகள் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(பாக்ஸ்) ''வெடிகுண்டு வெடித்ததுபோல் சத்தம் கேட்டது''

கார் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
அதிகாலை என்பதால் நாங்கள் வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தோம். அப்போது, வெடிகுண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டது. உடனே வெளியே சென்று பார்த்தோம். அங்கு பாலகிருஷ்ணனின் காரில் இருந்து வாணவெடிகள் வெடித்து சிதறிக் கொண்டு இருந்தது. மேலும், அந்த வாணவெடிகளால் எங்களது வீடுகளும் சேதம் அடைந்து உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு வாணவெடிகளை கொண்டு வராதபடி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்