வேளச்சேரியில் சாப்பாடு போட மறுத்த தாயை வெட்டிக்கொன்ற மகன்

சாப்பாடு போட மறுத்த தாயை, மகனே அரிவாமனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் வேளச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-09-21 09:57 GMT
சாப்பாடு போட மறுப்பு
சென்னை வேளச்சேரி நேருநகர் திரு.வி.க.தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி (வயது 47). இவருடைய மகன் மூர்த்தி (30). குடிபோதைக்கு அடிமையான இவர், தினமும் இரவில் வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் தாய்-மகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த மூர்த்தி, சாப்பிட்டு விட்டு சிறிதுநேரம் கழித்து வெளியில் சென்றார். பின்னர் குடிபோதையில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த மூர்த்தி, தனக்கு பசிக்கிறது. இன்னொரு முறை சாப்பாடு போடுமாறு தாயிடம் கேட்டார்.ஆனால் சாப்பாடு தீர்ந்து விட்டதாக அவரது தாயார் லட்சுமி கூறினார். அதற்கு மூர்த்தி, மீண்டும் சமையல் செய்து தனக்கு சாப்பாடு போடுமாறு வற்புறுத்தினார். உடனே லட்சுமி, நீ குடித்து விட்டு வீட்டுக்கு வருவாய். உனக்கு நான் சாப்பாடு சமைத்து போடவேண்டுமா? என கேட்டார். இதனால் தாய்-மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாய் வெட்டிக்கொலை
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் அரிவாமனையை எடுத்து வந்து பெற்ற தாய் என்றும் பாராமல் லட்சுமியின் வயிற்றில் வெட்டினார். மேலும் ஆத்திரம் தீரும் வரையில் தாயின் உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த லட்சுமி அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை கண்ட மூர்த்தி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் தரையில் மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் கைது
இதுபற்றி தகவல் அறிந்துவந்த வேளச்சேரி போலீசார், கொலையான லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மூர்த்தியை அவரது செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.அப்போது மூர்த்தி, அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மூர்த்தியை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

சாப்பாடு போட மறுத்த தாயை, மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்