வீட்டை காலி செய்ய மறுப்பு; பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சுரண்டையில் வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-20 23:05 GMT
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் திருமலையாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலைகனி (வயது 49). இவர் சுரண்டையில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகிறார். இவர் சுரண்டை அருகே குருங்காவனத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமியிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் பத்திரத்தின் மீது கிரைய ஒப்பந்தம் போட்டு கடன் வாங்கியதாகவும், பின்னர் கடனை முறையாக திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து அண்ணாமலைகனியின் வீட்டை காலி செய்து தருமாறு, கோர்ட்டில் ஆறுமுகசாமி வழக்கு தொடர்ந்தார். இதில் கிரைய ஒப்பந்தப்படி அண்ணாமலைகனி தனது வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றும் வகையில், கோர்ட்டு அமீனா பாலசுப்பிரமணியன் நேற்று வருவாய்த்துறை மற்றும் போலீசார் பாதுகாப்புடன் அண்ணாமலைகனியின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டை காலி செய்வதற்கு அண்ணாமலைகனியின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். அண்ணாமலைகனியின் சகோதரிகள் தங்களுக்கும் அந்த வீட்டில் பங்கு உள்ளது என்று கூறினர். அப்போது உங்களது உரிமைகளை கோர்ட்டில் தெரிவித்து நிவாரணம் பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே அண்ணாமலைகனியின் மனைவி கார்த்திகேயினி திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார், அதிகாரிகள் விரைந்து சென்று, கார்த்திகேயினி மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறினர். தொடர்ந்து அண்ணாமலைகனியிடம் இருந்து வீட்டின் சாவியை பெற்று ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்