நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-20 21:41 GMT
நெல்லை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக, அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். அதன்படி, நேற்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனு வழங்குவதற்காக ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

அப்போது நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா (வயது 25), கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் சோதனை செய்தபோது, விஷப்பாட்டிலை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விஷப்பாட்டிலை பறித்த போலீசார், திருநங்கை சுவேதாவை கலெக்டரிடம் மனு வழங்க செய்தனர்.

திருநங்கை சுவேதா அளித்த மனுவில், நான் மேலப்பாளையத்தில் பணம் கொடுக்கல்&வாங்கல் தொழில் செய்து வருகிறேன். தவறான தகவலின்பேரில், போலீசார் எனது வீட்டில் சோதனை நடத்தி, எனது தங்க நகைகளை எடுத்து சென்று விட்டனர். அந்த நகைகளை மீட்டு தரக்கோரி கடந்த மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்தேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, போலீசார் எனது வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற நகைகளை திருப்பித் தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சுவேதா, தனது மொபட்டில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திடீரென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடிச் சென்று, திருநங்கையிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். 

பின்னர் அவர் தனது பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்