விவசாயி கொலை வழக்கில் அண்ணன் கைது

சரகூர் அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார். அவர், கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

Update: 2021-09-20 21:30 GMT
மைசூரு: சரகூர் அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது அண்ணன் கைது செய்யப்பட்டார். அவர், கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.

விவசாயி கொலை

மைசூரு மாவட்டம் சரகூர் தாலுகா பாடகா கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி(வயது 36). விவசாயி. இவரது அண்ணன் மகாதேவசாமி(38). இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை குருசாமி, தனது குடும்பத்தினருடன் தோட்டத்திற்கு சென்று பருத்தி பறித்து கொண்டிருந்தார்.  பின்னர் மாலை குருசாமி தான் பிறகு வருவதாக கூறி குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்.  

ஆனால் நீண்ட நேரமாகியும் தோட்டத்தில் இருந்து குருசாமி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மகாதேவசாமி மற்றும் குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது தோட்டத்தில் குருசாமி, மர்மநபர்களால் கண்ணில் மிளகாய் பொடி தூவி கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். 

அண்ணன் கைது

இதுபற்றி மகாதேவசாமி, சரகூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான விவசாயி குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரகூறு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கொன்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். 

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரது அண்ணன் மகாதேவசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மகாதேவசாமி, போலீசிடம் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

கள்ளக்காதல் விவகாரம்

அதாவது, குருசாமிக்கும், அவரது அண்ணன் மகாதேவசாமிக்கும் இடையே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மகாதேவசாமி, தம்பி குருசாமியை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி சம்பவத்தன்று தோட்டத்திற்கு வேலை செய்து கொண்டிருந்த குருசாமியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, பின்னர் துண்டால் குருசாமியின் கழுத்தை இறுக்கி மகாதேவசாமி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்