டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி
பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தார்.
நெமிலி
பனப்பாக்கத்தில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு பலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் கோட்டை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40), இவரது மனைவி பூங்கொடி (32). இவர்களுக்கு ஜீவலதா (4) உள்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜீவலதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாததால் காஞ்சீபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜீவலதா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
பரிசோதனை முகாம்கள்
உயிரிழந்த ஜீவலதாவின் பெரியப்பா சுதாகர் கூறுகையில், பனப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் காணப்படுகிறது.
எனவே பேரூராட்சி நிர்வாகமும், அரசு மருத்துவமனையும் இணைந்து டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை முகாம்களை அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொண்டு மேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
உயிரிழந்த ஜீவலதாவின் தந்தை சீனிவாசன் அரக்கோணம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் துணை கோட்ட பொறியாளராகவும், தாய் பூங்கொடி வேலூர் வருமான வரித்துறையில் கிளார்க்காகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.