சர்வீஸ் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த தடை
கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சர்வீஸ் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சர்வீஸ் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சர்வீஸ் சாலை
கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு இருவழிச்சாலை இருந்தது. அந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட கோவை&பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
தற்போது அந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுற்றுவட்டார கிராம மக்களுக்காக சர்வீஸ் சாலை போடப்பட்டு இருக்கிறது. பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு சென்று வருபவர்கள் மேம்பாலத்தையும், கிணத்துக்கடவு பகுதிக்குள் சென்று வருபவர்கள் சர்வீஸ் சாலையையும் பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இந்த நிலையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சர்வீஸ் சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களால் சர்வீஸ் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று கிணததுக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த சில நாட்களாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்&இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை தடுக்க சர்வீஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் இரும்பு தடுப்புகள் மற்றும் பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்து உள்ளனர். மேலும் அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வரும் பஸ்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலையோரம் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதுகுறித்து போலீஸ்£ர் கூறியதாவது:-
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் தாறுமாறாக போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிறுத்தம், பஸ் நிலையம் முன்பு இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம். இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைத்தால் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.