பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மருத்துவ பணியாளர்கள் போராட்டம்
வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மருத்துவ பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
வால்பாறை
வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மருத்துவ பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தொகுப்பு ஊதியம்
கோவை மாவட்டம் வால்பாறை, முடீஸ், சோலையார் நகர் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் மருத்துவ பணியாளர்கள்(ஆஷா) 45 பேர், குறைந்த தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர்களுடன் இணைந்து எஸ்டேட் பகுதி மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகளை கண்காணித்து, அவர்களது வீடுகளுக்கே சென்று உடல்நிலையை கேட்டறிவது, அவசர உதவிகள் தேவைப்படுகிறவர்கள் குறித்து கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் கொடுப்பது, யாருக்கேனும் தொற்று நோய் அறிகுறிகள் உள்ளதா? என்பதை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் வால்பாறை பகுதியில் புதிதாக 38 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களும், ஆஷா பணியாளர்கள் செய்யும் பணிகளையே செய்ய உள்ளதாக தெரிகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் என்று கூறி வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கைகளில் பதாகைகளை ஏந்தி ஆஷா பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபு லட்சுமண் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்திலும் போராட்டம் நடத்துவோம் என்று ஆஷா பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நிறைவேற்ற வேண்டும்
இதுகுறித்து ஆஷா பணியாளர்கள் கூறியதாவது:- வால்பாறையில் ஆஷா பணியாளர்கள் செய்து வரும் மருத்துவ பணிகளை, மக்களை தேடி மருத்துவ திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களும் செய்யும் நிலை ஏற்பட உள்ளதாக தெரிகிறது. இது நடந்தால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஒரே பணிகளை 2 பேர் செய்வதற்கு பதிலாக எங்களுக்கு கூடுதல் தொகுப்பு ஊதியம் வழங்கினால் அந்த திட்ட பணிகளையும் நாங்களே செய்ய தயாராக உள்ளோம்.
ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை திரும்ப பெற்று அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் வேலை செய்யும் எஸ்டேட் பகுதியில் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் சார்பில் எங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது வேலையிழந்தால் அந்த வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்படும். இது தொடர்பாக கலெக்டர், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.