குடிநீர் கேட்டு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சி

குடிநீர் கேட்டு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயன்றனர்.

Update: 2021-09-20 17:14 GMT
கூடலூர்:
கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு லோயர்கேம்ப்பில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் பழுதானது. இதனால் கூடலூர் நகர பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதில் கூடலூர் 1, 2, 3 மற்றும் 4-வது வார்டு பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள 2 ஆழ்துளை குடிநீர் குழாய் மின்மோட்டார்களும் பழுது அடைந்துள்ளன. இதனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
இதையடுத்து குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் நகராட்சி ஆணையர் சேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆழ்துளை குடிநீர் குழாயை சரிசெய்து உடனடியாக தண்ணீர் வழங்கப்படும் என்றும் நீரேற்று நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்தவுடன் அனைத்து பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சேகர் கூறுகையில், லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் நகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யமுடியவில்லை. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் பணிகளை முடிப்பதாக தெரிவித்துள்ளனர். டிரான்ஸ்பார்மர் பழுதால் புதன்கிழமை(நாளை) வரை கூடலூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்