திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியை கலெக்டர் விசாகன் நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-20 15:48 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியை கலெக்டர் விசாகன் நேற்று தொடங்கி வைத்தார்.
சாக்கடை கால்வாய்
வடகிழக்கு பருவமழையால் மாவட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமலும், சாக்கடை கால்வாயில் கலக்காமலும் இருக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி நேற்று நடந்தது. இதில் கோபாலசமுத்திரம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், செயற்பொறியாளர் பாலசந்திரன், மாநகர் நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து மாநகராட்சி பகுதியில் தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்களை பார்வையிட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
400 தூய்மை பணியாளர்கள்
பருவமழையால் மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் நடவடிக்கையாக சாக்கடை கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள், ஓடைகள் தூர்வாரும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 25&ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். இந்த பணிகளுக்காக 8 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரிகள், 16 டிராக்டர்கள், 2 ஜெட்ராடர் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும் 400 தூய்மை பணியாளர்களும் தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சாக்கடை கால்வாய்கள், ஓடைகள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டதும் அவற்றில் குப்பைகளை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். அதையடுத்து கோபாலசமுத்திரம் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்