அமராவதி அணையில் இருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

Update: 2021-09-20 12:10 GMT
தளி
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன.அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை தீவிரமடைந்தது.அதைத்தொடர்ந்து வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது.இதன் காரணமாக அணையும் அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.இந்த சூழலில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சம்பா சாகுபடிக்காக அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து செயற்பொறியாளர் முருகேசன் தலைமையில் உதவிப் பொறியாளர் பாபுசபரீஸ்வரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறையினர் நேற்று காலை தண்ணீர் திறந்து வைத்தனர்.அதன்படி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக அமராவதிஆற்றில் நேற்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி  வரையில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 10 பழைய வாய்க்கால் பாசனத்தில் உள்ள 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு லங்கியம் முதல் கரூர் வலது கரை வரை 4536 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதேபோன்று புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாக நேற்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி  வரையில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் பயன்பெறும் வகையில் 2661 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 7197 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற முறையில் உரிய இடைவெளிவிட்டு திறந்து விடப்பட்டுள்ளது.அதன் படி மொத்தம் 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Reporter : L. Radhakrishnan  Location : Tirupur - Udumalaipet - Thali

மேலும் செய்திகள்