திருச்சியில் மேலும் 42 ரவுடிகள் கைது
திருச்சியில் 2 வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மேலும் 42 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி மாநகரத்தில் கடந்த 13 ந் தேதி அதிகாலை காந்தி மார்க்கெட் ராமகிருஷ்ணா பாலம் அருகே மாநகராட்சி கழிவறைக்கு சென்ற நிஷாந்த் (வயது 21) என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சில நாட்களில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் சின்ராசு என்பவர் கொலை செய்யப்பட்டார்.
அடுத்தடுத்து நடந்த இந்த இரு கொலை சம்பவங்கள் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மாநகரில் உள்ள ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமீனில் சுற்றி திரிபவர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் 42 ரவுடிகள் கைது
கமிஷனரின் உத்தரவை தொடர்ந்து, மாநகரில் உள்ள 14 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் ஒரேநாளில் 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 2 வது நாளாக ரவுடிகள் மீதான போலீசாரின் அதிரடி வேட்டை தொடர்ந்தது.
2&வது நாளான நேற்று மட்டும் 42 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கடந்த 2 நாட்களில் 63 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் 31 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வரவேற்பு
இதுதவிர பல்வேறு திருட்டு வழக்குகளில் தலைமறைவாக இருந்த 38 குற்றவாளிகளும் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகரில் திருட்டு, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் கமிஷனர் அருண் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரம் இவர்கள் மீண்டும் ஜாமீனில் வந்து, மீண்டும் ரவுடியிசத்தை தொடராமல் நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.