மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 பேர் பலி

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-09-19 20:46 GMT
திருச்சி
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் மாலிக் பாட்ஷா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (35). உறவினர்களான இருவரும் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு மாலிக் பாட்ஷா தனது மோட்டார் சைக்கிளில் ஷாஜகானை அழைத்துக்கொண்டு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை அருகே அவர்கள் வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் பஸ்சுக்கு அடியில் சிக்கினர்.
2 பேர் சாவு
இதனால் அவர்களை பஸ் சிறிது தூரம் இழுத்துச்சென்று நின்றது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவலறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் மாலிக் பாட்ஷா, ஷாஜகான் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்