மாவட்டத்தில் 189 இடங்களில் முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 189 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர்.
புதுக்கோட்டை:
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 750 இடங்களில் நடந்த முகாமில் 60 ஆயிரத்து 766 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த நிலையில் தொடர்ந்து நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில் மொத்தம் 189 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முகாம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசி டோஸ்களில் முதல் மற்றும் 2-வது தவணையை செலுத்தினர்.
நீண்ட வரிசை
புதுக்கோட்டையில் நகர்மன்றத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தினர். மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 850 பேருக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். போதுமான தடுப்பூசி டோஸ்கள் இல்லாததால் முகாம் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த வாரம் அதுபோன்று எதுவும் வழங்கப்படவில்லை. பொதுமக்களிடம் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு தடுப்பூசி பெரும்பாலும் செலுத்த தொடங்கி விட்டனர்.
வீடு, வீடாக சென்று தடுப்பூசி
கறம்பக்குடி தாலுகாவில் 39 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று தடுப்பூசி போடாதவர்களை அருகில் உள்ள மையங்களுக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட செய்தனர். இதேபோல் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களிலும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ரெகுநாதபுரம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரிகள் செவிலியர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று வீடு, வீடாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். மாற்றுத்திறனாளிகள் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொண்டதை காணமுடிந்தது. இப்பணிகளை கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சி நெய்வாசல்பட்டி சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் வன்னியம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 69 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.