தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடத்திய 2,100 கிலோ மஞ்சள் சிக்கியது
தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட 2,100 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரை கைது செய்து கொரோனாவுக்கு பயந்து இலங்கை கடற்படையினர் விடுவித்தனர்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட 2,100 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரை கைது செய்து கொரோனாவுக்கு பயந்து இலங்கை கடற்படையினர் விடுவித்தனர்.
2,100 கிலோ மஞ்சள் பறிமுதல்
ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் அவ்வப்போது ராமேசுவரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரைப்பகுதியிலிருந்து கடந்த 18-ந் தேதி அன்று ஒரு நாட்டுப்படகில் 6 பேர் சேர்ந்து மஞ்சள் மூடைகளை இலங்கைக்கு கடத்திச் சென்றதாக கூறப்படுகின்றது.
தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இந்திய கடல் பகுதியை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்ற போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்த தமிழக மீன்பிடி படகை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். சோதனை செய்து பார்த்ததில் அந்த நாட்டுப் படகில் சுமார் 60 சாக்குப்பைகளில் இருந்த 2,100 கிலோ மஞ்சளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
6 பேர் கைது
மஞ்சள் மூடைகளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியை சேர்ந்த முத்துகனி, மன்சூர், செல்லமுத்து, அகமதுகுட்டி, ரகுமான், அபுக்கனி ஆகிய 6 பேரை கைது செய்து இலங்கை கடற்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். கொரோனா பரவலுக்கு பயந்து விசாரணைக்கு பின்னர் மஞ்சள் மூடைகளை இலங்கைக்கு கடத்தி வந்த 6 பேர் மீதும் இலங்கை கடற்படையினர் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் எச்சரிக்கை செய்து படகுடன் 6 பேரை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட 6 பேரும் படகுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் மண்டபம் வேதாளை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இலங்கைக்கு மஞ்சள் மூடைகளை ஏற்றிச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு வந்துள்ள இந்த 6 பேர் குறித்தும் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசாரும் தீவிரமாக தகவல்களை சேகரித்து வருவதுடன் இந்த 6 பேரிடமும் இன்று அல்லது நாளை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்