கல்லூரி மாணவரிடம் பேஸ்புக்கில் நண்பராகி ரு.1 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கல்லூரி மாணவரிடம் பேஸ்புக்கில் நண்பராகி ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
பென்னாகரம் அருகே அரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 21). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் ஜூலி பேட்ரிக் என்ற இளம் பெண் நண்பரானார். இருவரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறிது காலம் பேஸ்புக்கில் கலந்துரையாடி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் மாணவர் கிறிஸ்துதாஸிடம் உனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன். அதில் ஐ&போன், தங்க காசு, கடவுள் ஆசீர்வதித்த எண்ணெய் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைப்பதாகவும், அதற்காக பணம் ரூ.1 லட்சத்து ஆயிரம் எனது வங்கி கணக்குக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு அந்த மாணவருக்கு செல்போன் மூலம் ஒரு அழைப்பு வருகிறது. அதில் உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. இந்த பார்சலுக்கு உரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி விட்டீர்களா? என்று கேட்டுள்ளனர். இதனை நம்பி மாணவரும் அந்த பணத்தை அந்த இளம் பெண்ணின் கணக்குக்கு அனுப்பி உள்ளார். பணம் அனுப்பிய மாணவருக்கு பார்சல் வந்து சேராததால் ஏமாற்றம் அடைந்த அவர் தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.