விழுப்புரம் மாவட்டத்தில் 600 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 600 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
விழுப்புரம்,
சிறப்பு முகாம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி, மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம், விழுப்புரம், மேல்மலையனூர், மயிலம் பகுதிகளில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்பட 600 இடங்களில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார்கள். முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, பொறியாளர் ஜோதிமணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாம்களில் 27 ஆயிரத்து 986 பேருக்கு தடுப்பூசி போட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.