புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலத்தில் பெருமாள் கோவில்கள் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலத்தில் பெருமாள் கோவில்கள் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

Update: 2021-09-18 22:22 GMT
சேலம்:
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சேலத்தில் பெருமாள் கோவில்கள் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். 
புரட்டாசி மாதம்
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். மேலும் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் இறைச்சியை தவிர்த்து விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.
கடந்தாண்டு கொரோனாவால் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை கொண்டாட அனுமதிக்கவில்லை. இந்தாண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளக்கேற்றி வழிபாடு
இந்த நிலையில் புரட்டாசி மாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமானவர்கள் சேலம் கோட்டை பெருமாள் கோவிலுக்கு வந்தனர். வழக்கம்போல் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனால் பக்தர்கள் பலர் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். 
இதேபோல் சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரெங்க நாதர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. மேலும் ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலம் அம்மாபேட்டை பாபுநகர் பகுதியில் அலங்கார பந்தல் அமைத்து அதில் வெங்கடேச பெருமாள், அலமேலு மங்கை தாயார் மற்றும் ராமானுஜர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் அங்கு வந்த சுமங்கலிகளுக்கு தாலி கயிறு வழங்கப்பட்டது.
வரதராஜ பெருமாள் கோவில்
சேலம் ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமிநாராயணன் சாமி கோவில், பட்டைகோவில் வரதராஜ பெருமாள் கோவில், சிங்கமெத்தை சவுந்திரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரெங்கநாதர் கோவில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், சின்னதிருப்பதி பெருமாள் கோவில், பெரமனூர் பெருமாள் கோவில் என மாநகரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பலர் கோவில்கள் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் கோவில் முன்பு விளக்கேற்றியும் வழிபட்டனர். 

மேலும் செய்திகள்