கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

பேராவூரணி பஸ் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-18 21:09 GMT

பேராவூரணி;-
பேராவூரணி பஸ் நிலையத்தில் தொழிலாளி ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தொழிலாளி பிணம்
தஞ்சை மாவட்டம் பழைய பேராவூரணி தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது40). இவர் நேற்றுமுன்தினம் பேராவூரணி பழைய பஸ் நிலையத்தில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இவரது உடலை பேராவூரணி போலீசார் கைப்பற்றி செந்தில்குமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். செந்தில்குமார் மரணம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதாவும் அவரை கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்யக்கோரியும் அவரது உறவினர்கள் பேராவூரணி அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட செந்தில்குமாரின் உடலையும் வாங்க மறுத்தனர். 
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட செந்தில்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத செந்தில்குமாரின் உறவினர்கள் குற்றவாளிகள் கைது செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என வலியுறுத்தி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதைத்தொடர்ந்து பேராவூரணி தாசில்தார் சுகுமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார்கள் செந்தில்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 4 மணி நேரம் பேராவூரணியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்