பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்:
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நேற்று முன்தினம் முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் அரியலூரில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் வந்தனர். ஆனால் கோவில் கதவு மூடப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் வெளியில் நின்று பக்தர்கள் பெருமாளை வணங்கி சென்றனர்.
தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் வரதராஜ பெருமாள் திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் காட்சியளித்தார். தா.பழூரில் உள்ள பால ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் ஆஞ்சநேய சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ஆஞ்சநேய சுவாமி வீதி உலா நடைபெற்றது. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.