லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கரூர்,
லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
லஞ்சம்
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான மரப்பெட்டிகளை கிருஷ்ணன் என்பவர் செய்து கொடுத்துள்ளார். இந்தநிலையில் அதற்கான தொகை ரூ.65 ஆயிரத்து 500-ஐ கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டுள்ளார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் (வயது 64), அலுவலக மேலாளர் மகாலிங்கம் (46) ஆகியோர் அதற்கான தொகையை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதற்கு கிருஷ்ணன் மறுத்துள்ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளனர்.
4 ஆண்டுகள் சிறை
லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கிருஷ்ணன் ரூ.5 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த வழக்கு கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் வழங்கினார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன், மேலாளர் மகாலிங்கம் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.