சங்கராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
சங்கராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பரிதாபம்
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். திருமணமான இவர் மனைவி சத்யா(வயது 32), மகள் பிரியாங்கா(10), மகன்கள் ஆரியன்(8), சிராஜ்(2) ஆகியோருடன் மும்பையில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பாட்டு கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சத்யா தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடந்த வாரம் வந்தார். பின்னர் அவர் நேற்று அங்குள்ள எட்டி ஆற்றில் குழந்தைகளுடன் துணிகளை சலவை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த ஆரியன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து ஆற்றில் தேடியபோது ஆழமான பகுதியில் சிக்கி இருந்த ஆரியனை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆரியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்து சத்யாவும் அவரது உறவினர்களும் கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி பலியான ஆரியன் மும்பையில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.