வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறித்த வழக்கில் மேலும் 5 பேர் கைது

ஆற்காட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறித்த வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-09-18 17:02 GMT
ஆற்காடு

ஆற்காட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறித்த வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர் 

ரூ.6 லட்சம் பறிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் ஆட்டோ கண்ணன் என்ற செல்வகுமார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் செயலாளராக இருந்து வருகிறார். 

கடந்த ஜூலை மாதம் 30&ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சிலர் இவரிடம் இருந்து ரூ.6 லட்சத்தை பறித்துச் சென்றனர்.

 இதுகுறித்து ஆட்டோ கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்காட்டை சேர்ந்த 2 நபர் மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். 

5 பேர் கைது

இந்த நிலையில் இன்று காலை ஆற்காடு புறவழிச்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்தனர். பின்னர் அவர்களை ஆற்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். 

விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த நரேந்திரன் என்ற நரேந்திரநாத் (வயது 42) ராஜேஷ் (33) சீனிவாசன் (34), கார் டிரைவர் அய்யப்பன் (25), பரமகுரு (45) என்பதும், இவர்கள் 5 பேரும் ஆட்டோ கண்ணன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்