கடலூர் சில்வர் பீச்சில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கடலூர் சில்வர் பீச்சில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Update: 2021-09-18 16:50 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையாக குறையவில்லை. தினமும் சராசரியாக 30 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் கடலூர் நகரில் மட்டும் தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்கள், முழுகவச உடை அணிந்து கொண்டு பரிசோதனையில் ஈடுபடுகின்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்ததும் முழுகவச உடை மற்றும் பரிசோதனைக்கு பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ கழிவுகள்

ஆனால் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதில் கடலூர் சுகாதாரத்துறை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் கொரோனா பரிசோதனை செய்ய பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் மற்றும் முழுகவச உடைகளை சுகாதாரத்துறையினர் கடலூர் சில்வர் பீச் செல்லும் சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்லும் சாலையோரத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை அகற்றாமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்