நிலக்கோட்டை அருகே மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
நிலக்கோட்டை அருகே மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேஸ்வரன் (வயது 24). இவரும், அதே ஊரை சேர்ந்த சுப்பையா மகள் திவ்யா என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜேஸ்வரன் தனது உறவினர் வீட்டில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த திவ்யாவின் தாய் பாண்டிமீனா, தனது மகளுடன் சேர்ந்து வாழுமாறு ராஜேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்து அவர் தகராறு செய்தார். மேலும் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை குத்தினார்.
இதில் படுகாயமடைந்த பாண்டிமீனாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்வரனை கைது செய்தார்.