பைக்காராவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பைக்காராவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பைக்காராவில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
மோட்டார் படகுகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
சவாரி செய்வதற்காக 8 இருக்கைகள் மற்றும் 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகுகள், அதிவேக படகுகள் என மொத்தம் 24 படகுகள் உள்ளன. மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சவாரியின் போது எழில் மிகுந்த அணை, வனப்பகுதி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை நேரில் பார்வையிட்டனர்.
தண்ணீரை கிழித்துக்கொண்டு சீறியபடி செல்லும் அதிவேக படகில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து குதூகலம் அடைந்தனர். 3 அதிவேக படகுகள் மட்டும் இருந்ததால், சவாரி செய்வதற்காக அவர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்தனர்.
எனவே, கூடுதலாக அதிவேக படகுகள் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பைக்காரா அணையின் இயற்கை அழகு பின்னணியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தொடர் மழை காரணமாக பைக்காரா அணையில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. மொத்த கொள்ளளவான 100 அடியில் 85 அடியாக உயர்ந்து இருக்கிறது. இதனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல் காட்சி அளிக்கிறது.
முழு ஊரடங்குக்கு பின்னர் கடந்த 23-ந் தேதி முதல் இதுவரை பைக்காரா படகு இல்லத்துக்கு 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர். வார விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் தினமும் 300 பேர் வருகின்றனர். சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் மலைமுகட்டில் நின்றபடி குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர். அங்கு குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் பைன்பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.