திருவேற்காட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

திருவேற்காட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-09-17 23:38 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த கோலடி, காந்தி சாலை மெயின்ரோட்டில் தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. அதன்பேரில் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அதில் பிணமாக கிடந்தவரின் தலை மற்றும் உடலில் வெட்டு காயங்கள் இருப்பதால் மர்மநபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்து இருப்பது தெரிந்தது. கொலையானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், திருவேற்காடு திருவேங்கடம் நகரைச் சேர்ந்த சண்முகம் (வயது 37) என்பதும், இவர் மீது பல்வேறு சிறு, சிறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

சண்முகம், ஆட்டோ ஓட்டி வந்ததுடன், கூலி வேலைக்கும் சென்று வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் அந்த பகுதிகளில் தகராறு செய்தும் வந்துள்ளார்.

சண்முகம் நேற்று முன்தினம் இரவு அந்த இடத்தில் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்திவிட்டு பேசி கொண்டிருந்தார். எனவே நண்பர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சண்முகத்தை கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்