குமரியில் 5 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குமரியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 5 வாலிபர்கள் நேற்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-17 22:03 GMT
நாகர்கோவில்:
குமரியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 5 வாலிபர்கள் நேற்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அகஸ்தீஸ்வரம் கீழசாலை பகுதியை சேர்ந்தவர் பகவதிநாதன் (வயது 22). இவரை கோட்டார் போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். விசாரணையில் பகவதிநாதன் மீது கோட்டார், ராஜாக்கமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து பகவதிநாதன் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
இதனைதொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற கலெக்டர் அரவிந்த், குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் பகவதிநாதனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நேற்று பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.
5 பேர் கைது
இதேபோல் கோணம் தளவாய்புரம் அந்தோணியார் தெருவை சேர்ந்த ரிஜூன்(19) மீது கோட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளது. இவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய தெற்கு தாமரைகுளம் முகிலன்குடியிருப்பை சேர்ந்த அருள் கணேஷ்(22) என்பவர் மீதும் கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர். இவர் மீது ஏற்கனவே கன்னியாகுமரி, வெள்ளிச்சந்தை ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிடாலம் உதயமார்த்தாண்டத்தை சேர்ந்த மரிய கிராஸ்வின்(23) என்பவர் மீது கோட்டார், குளச்சல் ஆகிய போலீஸ் நிலையங்களில் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருந்தன. அவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதேபோல் கஞ்சா வழக்கு தொடர்பாக சுங்கான்கடை பகுதியை சேர்ந்த பபிஸ்(23) என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதன்மூலம் கடந்த 9 மாதத்தில் குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்