கர்நாடக தேர்தல் ஆணைய அதிகாரத்தை பறிக்கும் மசோதா மேல்சபையில் நிறைவேறியது
கர்நாடக தேர்தல் ஆணைத்திடம் இருந்து வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை பறிக்கும் மசோதா எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டது.
பெங்களூரு:
வார்டுகள் மறுவரையறை
கர்நாடக தேர்தல் ஆணையத்திடம், வார்டுகள் மறுவரையறை, இட ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை பறிக்கும் விதமாக கர்நாடக கிராம சுவராஜ்ஜிய, பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அந்த மசோதா பா.ஜனதா உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து கர்நாடக மேல்-சபையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா நேற்று, அந்த கர்நாடக கிராம சுவராஜ்ஜியம் மற்றும் பஞ்சாயத்துராஜ் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அவர் பேசுகையில், "கிராம, தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துகளின் வார்டுகளை மாற்றி அமைப்பது மற்றும் இட ஒதுக்கீட்டை் முடிவு செய்யும் அதிகாரம் மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அந்த அதிகாரம் மாநில அரசால் அமைக்கப்படுவும் குழுவுக்கு வழங்க இந்த சட்ட திருத்த மசோதா வகை செய்கிறது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கி குழு அமைக்கப்படும்" என்றார்.
இந்த மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் பேசியதாவது:-
அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற...
பஞ்சாயத்து அமைப்புகளின் தொகுதிகளை வரையறை செய்யும் அதிகாரத்தை மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து பறிப்பதை காங்கிரஸ் எதிர்க்கிறது. தேர்தல் ஆணையம் அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும். அதன் மீது நம்பிக்கை இல்லை என்று கூறினால், ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்க முடியும்.
பா.ஜனதா ஆட்சியில் அரசியல் சாசனப்படி செயல்படும் அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. வருமான வரி, சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்பட அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்துகிறது. முக்கியமான அதிகாரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருப்பதால், அதிகாரிகள் ஆளுங்கட்சியிடம் குவிந்து கிடக்கும். அதிகாரிகள் மூலம் குழுக்களை அமைத்து தங்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஆளும் பா.ஜனதா முயற்சி செய்வது சரியல்ல.
இவ்வாறு எஸ்.ஆர்.பட்டீல் பேசினார்.
விரிவான விவாதம்
ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் திப்பேசாமி பேசும்போது, "மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அமைப்புகளின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது. அதனால் அரசு அவசரகதியில் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை அவசரகதியில் நிறைவேற்ற கூடாது. இதுகுறித்து விரிவான விவாதம் நடைபெற வேண்டும்" என்றார்.
அதைத்தொடந்து மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி பேசுகையில், "பஞ்சாயத்து அமைப்புகளை மறுவரையறை செய்வது தொடர்பாக 2,200 ஆட்சேபனை மனுக்கள் உள்ளன. அவற்றை விசாரணை நடத்துவது யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு அதிகாரியை கொண்டு வார்டுகளை மறுவரையறை செய்கிறது. அதற்கு பதிலாக பல அதிகாரிகளை உள்ளடக்கி குழு அமைத்து அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த மசோதாவுக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்" என்றார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
அதைத்தொடர்ந்து அந்த மசோதாவை மேலவை தலைவர், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) என இரு எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. அந்த வெளிநடப்புக்கு மத்தியில் கர்நாடக கிராம சுவராஜ்ஜிய, பஞ்சாயத்து ராஜ் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.