அரக்கோணம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை
அரக்கோணம்
அரக்கோணம் அருகே வெல்டிங் மெஷின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம்.எந்திரம் உடைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூரில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாவலர் இல்லை.
இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு இந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று வெல்டிங் மிஷின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் வெல்டிங் மெஷின்மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
ரூ.4 லட்சம் கொள்ளை
விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடந்த 15-ந் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் நிரப்பப்பட்டதாக ஏ.டி.எம். மைய ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் சேதுபதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்