வேலூர் மாவட்டத்தில், நாளை 880 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
880 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
வேலூர்
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேலூர் மக்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ குறுந்தகவல் ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
தமிழக அரசின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் அரசின் உத்தரவின்பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று வேலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 880 இடங்களில் நடைபெற உள்ளது.
கொரோனாவால் பலர் பெற்றோரை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் ஏராளம் பேர். தற்போது தான் மெல்ல, மெல்ல அனைவரும் மீண்டு வருகின்றனர். இந்தப்பேரிடர் மீண்டும் சமூகத்தில் தாக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.