தேனி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள் விழா
தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் பிறந்தநாள் விழா நடந்தது.
தேனி:
தேனி மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பல்வேறு இடங்களில் நடந்தது. அதன்படி பெரியகுளத்தில் உள்ள தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெரியாரின் பிறந்த நாள் விழா நடந்தது. இதையடுத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பெரியார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சிவக்குமார், அரசு வக்கீல் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி
போடி சங்கிலி ஆசாரியார் பேட்டையில் உள்ள பெரியார் வளாகத்தில் பெரியாரின் பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு தேனி மாவட்ட திராவிடர் கழக தலைவர் ரெகுநாதன் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சரவணகுமார் எம்.எல்.ஏ., தேனி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரத்தினசபாபதி, போடி தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் முகமது பசீர், அய்யப்பன், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் ராஜ ரமேஷ், போடி நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி
தேனியில் உள்ள தி.மு.க. வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது. இதற்கு தேனி வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எம்.சக்கரவர்த்தி தலைமை தாங்கி பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். இதில் தேனி ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் ஜெகதீசன், கிளை செயலாளர் திருப்பதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது.