போடி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்ப பையில் இருந்த 3½ கிலோ கட்டி அகற்றம்

போடி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்ப பையில் இருந்த 3½ கிலோ கட்டி அகற்றப்பட்டது.

Update: 2021-09-17 13:59 GMT

போடி(மீனாட்சிபுரம்):
போடி வடக்கு ராஜ வீதியை சேர்ந்தவர் ஜோதிபாசு. இவரது மனைவி இந்திராணி (வயது 48). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்திராணிக்கு வயிற்றின் அடிப்பகுதி வீங்கியும், அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டும் வந்தது. இதையடுத்து அவர் போடி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கர்ப்ப பையில் சதைப்பிடிப்பு கட்டி இருந்தது டாக்டர்களால் உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து போடி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அன்புசெழியன், மயக்கவியல் டாக்டர் சாந்தி தேவி மற்றும் உதவியாளர்கள் பிரவின் பாலாஜி, பாண்டியன், சுகந்தி, காயத்திரி, கண்ணம்மா ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் ஆபரேஷன் செய்து இந்திராணியின் கர்ப்ப பையில் இருந்த 3½ கிலோ கட்டியை அகற்றினர்.  தற்போது இந்திராணி நலமாக உ ள்ளார்.
இதுகுறித்து தலைமை டாக்டர் ரவீந்திரநாத் கூறுகையில், பெண்களுக்கு கர்ப்ப பையில் கட்டிகள் வளர்ந்து வலி தாங்க முடியாமல், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அடிக்கடி வயிற்று வலி, வயிற்று எடை அதிகரித்து இருந்தால் அலட்சியம் செய்யாமல், உடனே டாக்டரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்