ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-17 00:21 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் தனியார் வங்கி ஏ.டி.எம். ஒன்று உள்ளது. கடந்த 14-ந்தேதி நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை வெல்டிங் எந்திரம் வைத்து உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். போலீஸ் நடமாட்டத்தால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். இருப்பினும் காரில் சென்ற மர்ம நபர்களை போலீசார் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்தி சென்று பிடித்தனர்.

காரில் வந்த டிரைவர் உள்பட மொத்தம் 4 பேர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரையும், அதிலிருந்த கையுறை உள்பட பல பொருட்களையும், ஏ.டி.எம்.மையத்தின் அருகே உள்ள ஒரு துணிக்கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கொண்டு ஆரம்பாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையில் மர்மநபர்கள் பயன்படுத்திய காரானது, கடந்த 13-ந் தேதி ஆந்திர மாநிலம் கூடூரில் இருந்து திருடப்பட்டது என்பதும், அந்த கார் திருடு போனது குறித்து அங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட ஏ.டி.எம். எந்திர கொள்ளையில் ஈடுபட முயற்சித்த மர்ம நபர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் கை தேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக துப்பு துலக்கிட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்