ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தை மீட்பு-சேலத்தில் அதிகாரிகள் விசாரணை
ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தையை மீட்டு பெற்றோர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத ஆண் குழந்தையை மீட்டு பெற்றோர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
மேட்டு உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 57), விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (60). இவர்களுக்கு அந்த பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. குழந்தை இல்லை.
கடந்த சில நாட்களாக ஒரு ஆண் குழந்தையை வளர்த்து வந்தனர். குழந்தை இல்லாதவர்களுக்கு திடீரென்று எப்படி குழந்தை வந்தது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் கார்மேகத்திற்கு புகார் தெரிவித்தனர்.
குழந்தை மீட்பு
இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் கார்மேகம், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கமுத்து, சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கேரளாவில் இருந்து ரூ.20 ஆயிரத்துக்கு குழந்தையை வாங்கி வளர்த்து வருகிறோம் என்று கூறினர்.
இதையடுத்து சட்டப்படி குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்று கூறி 3 மாதமே ஆகிய ஆண் குழந்தையை அவர்களிடம் இருந்து அலுவலர்கள் மீட்டனர். பின்னர் கேரளாவை சேர்ந்த குழந்தையின் பெற்றோர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை கடத்தல் கும்பல்
சேலம் மாவட்டத்தில் கிராமப்பகுதியைச் சேர்ந்த அங்கமுத்துவுக்கு கேரளாவில் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும், குழந்தையை அதன் பெற்றோரிடம் இருந்துதான் வாங்கினாரா அல்லது ேசலத்தில் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் குழந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து அங்கமுத்து குழந்தையை வாங்கினாரா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.