கர்நாடகத்தில் 1 லட்சம் கட்டிடங்களில் ‘ப்ரீபெய்டு' மீட்டர்களை பொருத்த முடிவு - மந்திரி சுனில்குமார் தகவல்

கர்நாடகத்தில் முதல்கட்டமாக 1 லட்சம் கட்டிடங்களில் ப்ரீபெய்டு மின் மீட்டர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறினார்.

Update: 2021-09-16 21:19 GMT
பெங்களூரு:

பயப்பட தேவை இல்லை

  கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் விட்டல்கவுடா பட்டீல், மின்சாரத்துறை தொடர்பாக கேட்ட கேள்விக்கு மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:-

  மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்படுவதாக வெளியாகும் தகவல் பற்றி விவசாயிகள், பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் என யாரும் பயப்பட தேவை இல்லை. அத்தகைய திட்டமோ, ஆலோசனைேயா எங்களிடம் இல்லை. வதந்திகளை யாரும் நம்பக்கூடாது. மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஆர்.டி.எஸ்.எஸ். (வினியோக துறை திட்டம்) திட்டத்தில் மீட்டர் பொருத்துவது ஒரு பகுதி ஆகும்.

மின் மீட்டர்கள்

  அரசு அலுவலகங்கள் மின்சார துறைக்கு ரூ.5,798 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. இவ்வளவு பெரிய தொகையை பாக்கி வைத்து கொண்டால் மின்சாரத்துறையை எப்படி சரியான முறையில் நிர்வகிக்க முடியும். வருமானமே இல்லை என்றால் எப்படி சீர்திருத்தம் செய்ய முடியும். அரசு அலுவலகங்கள் மற்றும் பெங்களூரு மின் விநியோக நிறுவன எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக 1 லட்சம் கட்டிடங்களில் ப்ரீபெய்டு மின் மீட்டர்களை பொருத்த முடிவு செய்துள்ளோம். இதன் சாதக-பாதகங்களை பார்த்து கொண்டு அதன் பிறகு மற்ற கட்டிடங்களுக்கு இந்த மீட்டர்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

  பொதுமக்களுக்கு தரமான மின்சாரம் வழங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். மின் வினியோக பணிகளை ஆன்லைன் மூலம் கண்காணிப்பதை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் இழப்பை குறைக்க முடியும். மேலும் மின் கசிவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழிற்பேட்டைகளில் மின் வினியோகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

இலவச மின்சாரம்

  மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் வெளிமாநிலங்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம். காபி விளையும் பகுதியில் இலவசமாக மின்சாரம் வினியோகம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
  இவ்வாறு சுனில்குமார் பேசினார்.

மேலும் செய்திகள்