ஆம்புலன்ஸ்-லாரி மோதிய விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் நசுங்கி சாவு
பெங்களூரு அருகே ஆம்புலன்சும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் நோயாளி உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். பலியான நோயாளியை மேல் சிகிச்சைக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
ஆம்புலன்ஸ் மோதியது
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெரலூரு கேட் அருகே நேற்று காலை 6.30 மணியளவில் ஒரு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் ஒரு லாரியும் சென்றது. இந்த நிலையில், லாரியின் பின்புறம் ஆம்புலன்ஸ் மோதியதாக தெரிகிறது. மோதிய வேகத்தில் ஆம்புலன்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஆம்புலன்சில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் அத்திபெலே போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய 6 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நோயாளி சாவு
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஜாதவ் அசோக், சென்னையை சேர்ந்த அன்வர் கான், ஆம்புலன்ஸ் டிரைவர் மேனான் என்று தெரிந்தது.
படுகாயம் அடைந்தவர்கள் பெயர் ஜிதேந்திரா, டாக்டர் பனவேல், மற்றொரு டிரைவர் பபீயா, அகமது சேக், யூசுப் கான், பிராதார் என்று தெரியவந்துள்ளது.
சிகிச்சைக்காக சென்னைக்கு...
ஜாதவ் அசோக் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மும்பை அருகே கல்யாண் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக மும்பையில் இருந்து கர்நாடகம் வழியாக சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஆம்புலன்சில் அழைத்து சென்றுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்து உண்டானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.