ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி ரூ.6 கோடி ஊழல் செய்தார் - சா.ரா.மகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
மைசூரு கலெக்டராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, திட்ட பைகள் கொள்முதலில் ரூ.6 கோடி ஊழல் செய்துள்ளதாக சட்டசபையில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் சா.ரா.மகேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு:
ரூ.6 கோடி ஊழல்
கர்நாடக சட்டசபையில் நேற்று விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமி பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர் சா.ரா.மகேஷ் குறுக்கிட்டு, மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி அரசின் திட்ட பைகள் கொள்முதலில் ரூ.6 கோடி ஊழல் செய்துள்ளதாக அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-
மைசூருவில் முன்பு கலெக்டராக பணியாற்றியவர், அரசின் திட்ட பயன்களை வழங்குவதற்காக பைகளை கொள்முதல் செய்துள்ளார். இதில் அவர் ரூ.6 கோடி வரை ஊழல் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதிப்பது இல்லை. அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டால் 35 ஆண்டுகள் காலம் அதிகார பலம், செல்வாக்குடன் இருக்கிறார்கள்.
இவ்வாறு சா.ரா.மகேஷ் பேசினார்.
உரிய நடவடிக்கை
அதைத்தொடர்ந்து தனது பேச்சை தொடர்ந்த குமாரசாமி, "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரடியாக ஊடகங்கள் முன்பு தோன்றி மக்கள் பிரதிநிதிகளை விமர்சித்தால் இந்த நிர்வாக அமைப்பு எங்கே போய் நிற்கும்?. அதிகாரிக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவர் தலைமை செயலாளரிடம் அறிக்கை வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மைசூருவில் மோதலில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தலைமை செயலாளருக்கு பெங்களூருவுக்கு வரவழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மாறாக தலைமை செயலாளரே மைசூருவுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். இது சரியா?" என்றார்.
மோதல் ஏற்பட்டது
ரோகிணி சிந்தூரி மைசூரு கலெக்டராக இருந்தபோது, அவருக்கும், சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. சா.ரா.மகேஷ் அரசு நிலத்தை ஆக்கிமித்துள்ளதாக அவர் புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.