இடி, மின்னலுடன் பலத்த மழை

ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2021-09-16 20:18 GMT
ஜெயங்கொண்டம்:

பலத்த மழை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறி பயிர்கள், கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரின்றி வாடின. தற்போது கடலை பயிர் அறுவடை செய்ய உள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் மழையை எதிர்பார்த்து கடலையை பறிக்க தயாராக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரத்தில் வெப்பம் குறைந்து லேசாக குளிர்ந்த காற்று வீசியது. மதியத்திற்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இதில் சுமார் ஒரு மணி நேரம் லேசான இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடையார்பாளையம்
உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதில் உடையார்பாளையம், கழுமங்கலம், முனையதிரையன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மனகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.  இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்