கடலூர் கோர்ட்டில் 4 பேர் சரண்
சென்னையில் ரியஸ் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர்.
கடலூர்,
சென்னை மந்தைவெளியைச்சேர்ந்தவர் கோபி என்கிற உருளை கோபி (வயது 39). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆவின் பால் விற்பனை கடையும் நடத்தி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபி மயிலாப்பூர் அப்பு தெருவில் தனது நண்பருடன் இரவு நேரத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கோபியை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் பற்றி மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.
4 பேர் சரண்
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டன் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சரவணன் (40), அருணாசலம் தெரு இளவழகன் மகன் கலையரசன் (27), திருவள்ளூர் மாத்தூர் மணலி பெருமாள் மகன் சுரேஷ் என்கிற நயினார் சுரேஷ் (40), ராஜா அண்ணாமலைபுரம் மந்தவெளி குடிசை பகுதி சுந்தரராஜ் மகன் பார்த்திபன் (25) ஆகிய 4 பேர் கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவபழனி முன்பு சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.