நகை அடகு கடை உரிமையாளர்கள் கடையடைப்பு. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
போலீசார் அவதூறாக பேசியதாக கூறி நகை அடகு கடை உரிமையாளர்கள் கடையடைப்பு செய்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்
போலீசார் அவதூறாக பேசியதாக கூறி நகை அடகு கடை உரிமையாளர்கள் கடையடைப்பு செய்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகை அடகு கடை
ஆம்பூர் நகரம் ஷாராப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நகை மற்றும் அடகு கடைகள் உள்ளன. நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகை அடகு வைத்தது சம்பந்தமாக ஆம்பூர் நகர போலீசார் விசாரணைக்கு வந்தனர். அப்போது கடை உரிமையாளரை போலீசார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து ஆம்பூர் ஷராப் பஜாரில் உள்ள அனைத்து வியாபாரிகளை திரட்டி நகை மற்றும் அடகு கடை அனைத்தையும் வியாபாரிகள் அடைத்துவிட்டு போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்
பின்னர் அனைத்து நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் இது குறித்து டவுன் இன்ஸ்பெக்டர் திருமாலிடம் கேள்வி எழுப்பியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் நகை அடகு கடை உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.